போட்டியின்றி ரிலீசாகும் மோகன்லாலின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்

மோகன்லால் நடித்துள்ள பிரம்மாண்ட படத்தை போட்டியின்றி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ள இப்படம் 3 தேசிய விருதுகளை வென்றுள்ளது.

‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 12-ந் தேதி ஓணம் பண்டிகையை ஒட்டி திரையரங்குகளில் வெளியிடப்பட உள்ளது. அதேநேரத்தில் இந்த படம் ரிலீசாகும் சமயத்தில் மற்ற படங்கள் எதுவும் வெளியிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. 3 வாரங்களுக்கு சுமார் 600 திரையரங்குகளில் இப்படத்தை போட்டியின்றி திரையிட முடிவு செய்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!