சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவருக்கு வாய்ப்பளிக்கும் ஜிவி பிரகாஷ்

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்தார்.

இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் ஜி.வி.பிரகாஷ். தற்போது ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4ஜி, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் வாடிவாசல், தனுஷின் 43-வது படம் ஆகியவற்றிற்கு இசையமைத்தும் வருகிறார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சாலையோரம் நாதஸ்வரம் வாசிப்பவரின் வீடியோவை டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்த ஜிவி பிரகாஷ், ‘இந்த நபர் யார் என்று தெரிந்தால் சொல்லுங்கள், அவரை பாடல் பதிவுக்குப் பயன்படுத்திக் கொள்வேன். மிகவும் திறமைசாலியாக இருக்கிறார். குறிப்புகள் மிக துல்லியமாக இருக்கின்றன’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதையடுத்து நெட்டிசன் ஒருவர், நாதஸ்வரம் வாசிக்கும் நபரின் பெயர் நாராயணன் என்றும் அவரது தொலைபேசி எண்ணையும் பகிர்ந்தார். பெங்களூரு தெருக்களில் பூம் பூம் மாடுடன், நாதஸ்வரம் வாசிக்கும் அந்தக் கலைஞருக்கு விரைவில் தன் இசையில் வாசிக்க வாய்ப்பளிப்பதாக ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதேபோல் கடந்த 2019ம் ஆண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், நொச்சிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற இளைஞர் ஒருவர் பாடிய ‘கண்ணாண கண்ணே’ பாடல் சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதையடுத்து அந்த இளைஞரை அழைத்து தனது இசையில் வெளிவந்த ‘சீறு’ படத்தில் ‘செவ்வந்தியே…’ என்ற பாடலைப் பாட வைத்தார் இசையமைப்பாளர் டி இமான்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!