படத்துக்காக போடப்பட்ட செட்டை சூறையாடிய புயல் – தயாரிப்பாளர் போனி கபூருக்கு ரூ.2 கோடி இழப்பு

அண்மையில் வந்த டவ்தே புயலால் மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று கடுமையாக சேதமடைந்துள்ளது.

இந்தியில் போனிகபூர் தயாரிப்பில், அமித் ரவிந்தர்நாத் ஷர்மா இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘மைதான்’. இந்திய முன்னாள் கால்பந்து வீரர் மற்றும் பயிற்சியாளரான சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. நடிகர் அஜய் தேவ்கான், சையத் அப்துல் ரஹீமாக நடிக்கிறார். இந்தியில் தயாராகும் இந்தப் படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளிலும் டப் செய்து வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், மைதான் படத்துக்காக மும்பையில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டிருந்த கால்பந்து மைதானம் செட் ஒன்று, அண்மையில் வந்த டவ்தே புயலால் கடுமையாக சேதமடைந்துள்ளது. புயல் தாக்கிய சமயத்தில் 40க்கும் மேற்பட்டோர் அந்த செட்டில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. இருப்பினும் இதனால் 2 கோடி ரூபாய் வரை தயாரிப்பாளருக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மைதான் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர், தற்போது தமிழில் அஜித் நடிக்கும் வலிமை படத்தை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!