தடுப்பூசி போடாதவர்கள் படப்பிடிப்பில் கலந்துகொள்ள அனுமதி இல்லை – ஆர்.கே.செல்வமணி

தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்று பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. தினசரி கொரோனா பாதிப்பும் 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 24-ந் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வருகிற மே 31 ஆம் தேதி வரை திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் உள்ளிட்ட பணிகள் நடைபெறாது என பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழகத்தில் மீண்டும் படப்பிடிப்புகள் தொடங்கும் பொழுது, அங்கு பணி செய்யும் அனைவரும் தடுப்பூசி எடுத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று பெப்சி அமைப்பு வாய்மொழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே படப்பிடிப்பு தளத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. உடல் உபாதைகளால் தடுப்பூசி எடுத்துக் கொள்ள முடியாதவர்கள் அதற்கான உரிய கடிதத்தை அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!