மாதவனின் ‘ராக்கெட்ரி’ பட டிரெய்லரை பார்த்து கண்ணீர் விட்ட சமந்தா

‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு, திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார்.

நடிகர் மாதவன் தற்போது இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாகி உள்ள ‘ராக்கெட்ரி’ படத்தில் நம்பி நாராயணனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி அவரே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரிக்கவும் செய்துள்ளார். இப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக சிம்ரன் நடித்துள்ளார். மேலும் நடிகர்கள் சூர்யா, ஷாருக்கான் ஆகியோர் கவுரவ வேடத்தில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்படத்தின் டிரெய்லர், ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லரை பார்த்த பிரபலங்கள் பலரும் மாதவனை பாராட்டி வருகின்றனர். அந்த வகையில், இந்த டிரெய்லரை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை சமந்தா, “நான் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பே இந்த டிரெய்லரை பார்த்துவிட்டேன். அப்போதே எனக்கு கண்களில் கண்ணீர் வந்தது. மாதவன் சார் நீங்கள் ஒரு ஜீனியஸ்” என பதிவிட்டுள்ளார்.

ராக்கெட் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக 1994-ல் கைதானவர் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன். பின்னர் குற்றம் செய்யவில்லை என்று நிரூபிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார். அவர் வாழ்க்கையில் நிகழ்ந்த பல்வேறு சம்பவங்களை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!