மதுரையில் அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்திய இயக்குனர் கைது

ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனரை போலீசார் கைது செய்தனர்.

மதுரை சிந்துப்பட்டி கைலாசநாதர் கோவில் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடப்பதாக திடியன் கிராம நிர்வாக அதிகாரி பிரபாகருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் அவர் உடனடியாக சம்பவ இடத்துக்கு நேரில் சென்று பார்த்தார். அப்போது அங்கு 50 குழந்தைகளுடன் படப்பிடிப்பு நடந்து கொண்டு இருந்தது.

பிரபாகர், இதுதொடர்பாக இயக்குனர் செந்தில்குமார் (வயது 51) என்பவரிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர் மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பு நடத்தியது தெரியவந்தது.

இதுதொடர்பாக சிந்துப்பட்டி போலீசில் அவர் புகார் செய்தார். அதன் பேரில் சப்- இன்ஸ்பெக்டர் ராஜபாண்டி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

செந்தில்குமார் ஒரு சில டாகுமெண்டரி சினிமா படங்களை எடுத்து உள்ளார். தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றுக்காக திடியன் தாமரைக்குளத்தில் படப்பிடிப்பு நடத்தியதாக தெரிவித்து உள்ளார். அவர் போலீசார் உள்பட யாரிடமும் அனுமதி பெறவில்லை என்பது தெரியவந்தது.

எனவே சிந்துப்பட்டி போலீசார் ஊரடங்கு விதிமுறைகளை மீறி 50 குழந்தைகளுடன் சினிமா படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் செந்தில்குமாரை கைது செய்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!