அரசியல்வாதியாக விருப்பமா? – நடிகை கங்கனா ரணாவத் விளக்கம்

அரசியலில் ஈடுபட விருப்பமா என்பது குறித்து நடிகை கங்கனா ரணாவத் சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்க்கை, ‘தலைவி’ என்ற பெயரில் சினிமா படமாக தயாராகி உள்ளது. ஏ.எல்.விஜய் இயக்கி உள்ளார். ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாக உள்ளது. இதன் இந்தி பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது.

இதில் கங்கனா ரணாவத் கலந்து கொண்டு பேசியதாவது: “நாட்டில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளை பற்றி நான் பேசி வருகிறேன். விவசாயிகள் போராட்டம் குறித்தும் கருத்து தெரிவித்தேன். இதையெல்லாம் வைத்து எனக்கு அரசியலில் ஈடுபட ஆசை வந்துவிட்டது என்று பேசுகிறார்கள். எனக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இல்லை. அரசியல்வாதியாகவும் விரும்பவில்லை.

ஒரு சாதாரண பெண்ணாகத்தான் எனது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறேன். எனது பேச்சுக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை. நான் நேர்மையாக பேசுகிறேன். நேர்மையாக இருப்பது பிடிக்காததால் என்னை அவதூறாக பேசுகிறார்கள். என் மனதில் எந்த உள்நோக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேசுவதை சிலர் தீவிரமாக எடுத்துக் கொள்கின்றனர்”. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!