காதம்பரி – விமர்சனம்

நடிகர் அருள்
நடிகை காசிமா
இயக்குனர் அருள்
இசை பிருத்வி
ஓளிப்பதிவு விடிகே உதயன்
நாயகன் அருள், தனது காதலி, தங்கை உள்பட 4 பேருடன் ஒரு காட்டுப்பகுதிக்கு காரில் செல்கிறார். செல்லும் வழியில் கார் விபத்துக்குள்ளாகிறது. அந்த சமயத்தில் மழை பெய்ததால், அருகில் உள்ள பங்களாவில் ஓய்வெடுக்க செல்கின்றனர். அனைவரும் பங்களாவை சுற்றிப்பார்த்துக் கொண்டிருக்கும் சமயத்தில், ஒரு குழந்தை அழும் சத்தம் கேட்கிறது. அப்போது நாயகனின் தங்கை, அது என்னவென்று சென்று பார்க்கிறார்.

அங்கு ஒரு அறையில் குழந்தை ஒன்று இருப்பதை பார்க்கிறார். இதையடுத்து அந்த அறையில் இருந்து குழந்தையை காப்பாற்றுகிறார். அந்த குழந்தையை காப்பாற்றிய பிறகு சில அமானுஷ்யமான விஷயங்கள் அந்த பங்களாவில் நடக்கிறது. இதையடுத்து என்ன ஆனது? அவர்கள் அந்த பங்களாவில் இருந்து தப்பித்தார்களா? இல்லையா? அந்தக் குழந்தை ஏன் அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தின் இயக்குனர் அருள்தான் நாயகனாகவும் நடித்திருக்கிறார். இதுதான் அவருக்கு முதல் படம் என்பதை அவரின் நடிப்பே காட்டி விடுகிறது. கதாநாயகியாக நடித்துள்ள காசிமா ரஃபி மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் வரும் அகிலா நாராயணன், சர்ஜுன், நிம்மி, பூஜிதா, சௌமியா என அனைவருமே புதுமுகங்கள் தான். இவர்களும் நடிப்பில் பெரிதாக சோபிக்கவில்லை.

இயக்குனர் அருள், முழுக்க முழுக்க திகில் படமாக உருவாக்க வேண்டும் என்பதற்காக படத்தை பாடல்களே இல்லாமல் எடுத்துள்ள விதம் பாராட்டத்தக்கது. ஒருசில இடங்களில் பயப்பட வைத்தாலும், மெதுவாக நகரும் திரைக்கதை படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கதாபாத்திரங்களின் தேர்விலும் கவனம் செலுத்தி இருக்கலாம்.
குறைந்த பட்ஜெட் படம் என்பதனால், படத்தின் பெரும்பாலான காட்சிகளை பங்களாவிற்குள்ளேயே எடுத்துள்ளனர். இதற்கு ஏற்றார் போல் வித்தியாசமான கோணங்களில் காட்சிப்படுத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் விடிகே உதயன், படத்தில் பாடல் எதுவும் இல்லை என்பதால் தனது முழு உழைப்பையும் பின்னணி இசை மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் பிருத்வி.

மொத்தத்தில் ‘காதம்பரி’ திகில் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!