சித்ரா தற்கொலை வழக்கு- சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழு அறிக்கை தாக்கல்

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை வழக்கு தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் நிபுணர் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த டிசம்பர் 9-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த நசரத்பேட்டை போலீசார், சித்ராவின் கணவர் ஹேம்நாத்தை கைது செய்தனர்.

அவர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை ஐகோர்ட்டில் ஹேம்நாத் தாக்கல் செய்த மனு நீதிபதி வி.பாரதிதாசன் முன்பு விசாரணையில் உள்ளது.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்ட பின் 13 சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட்டுள்ளனர் என்றும், சித்ரா, தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக நிபுணர்குழு அறிக்கை அளித்துள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது. இந்த அறிக்கை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை வருகிற 5-ந்தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கின் விசாரணை குறித்த அறிக்கையை நாளை மறுநாள் தாக்கல் செய்யவும் உத்தரவிட்டார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!