சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது… ரஜினியின் அரசியல் முடிவு குறித்து மோகன் பாபு அறிக்கை

சேற்றில் ஒட்டாமல் இருப்பது நல்லது… ரஜினியின் அரசியல் முடிவு குறித்து நடிகரும் அவரது நெருங்கிய நண்பருமான மோகன் பாபு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக இருக்கும் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். பின்னர், உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை என்று சமீபத்தில் அறிவித்தார். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பலரும் சமூக வலைதளத்தில் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு பக்கம், ரஜினியின் உடல்நிலை தான் முக்கியம் எனக் கருத்து தெரிவித்துள்ளனர். தற்போது, ரஜினியின் முடிவு குறித்து அவருடைய நெருங்கிய நண்பரும், தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகருமான மோகன் பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ரஜினிகாந்த் எனக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள், உடல்நிலை காரணமாக அவர் அரசியலில் இறங்கவில்லை என்று அறிவித்துள்ளார். அனைத்து ரசிகர்களுக்கும் ஏமாற்றமாக இருந்தாலும், அவரது உடல்நிலையை முழுமையாக அறிந்த ஒரு நண்பராக அது நல்லது என்று நம்புகிறேன்.

ரஜினி மிகவும் நல்லவர், எறும்புக்குக்கூட தீங்கு நினைக்காதவர். ரஜினி போன்ற நபருக்கும், என்னை போன்ற ஒரு நபருக்கும், அரசியல் பயனற்றது, ஏனென்றால் நாங்கள் இருப்பதைப் அப்படியே பேசுகிறோம். யாரை நம்புவது, யாரை நம்பக்கூடாது என்று கூட உங்களுக்குத் தெரியாது. அரசியல் என்பது ஒரு மயக்கம், ஒரு சேறு. அந்த சேற்றில் நீங்கள் ஒட்டாமல் இருப்பது நல்லது.

ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவரும் ரஜினிகாந்த்தைப் போலவே நல்லவர்கள். நீங்கள் அனைவரும் எனது நண்பரின் முடிவை தயவுடன் புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!