எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை?

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடந்தப்படுவதாக கூறப்படுகிறது.

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று அறிகுறிகளுடன் கடந்த 5 -ந் தேதி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மிதமான அறிகுறிகளே இருந்த நிலையில், ஆகஸ்ட் 13-ந் தேதி அன்று இரவு அவரது உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டது.

இதையடுத்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, உயிர்காக்கும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அவரது மகன் எஸ்.பி.பி. சரணும் எஸ்.பி.பி. உடல்நிலை குறித்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.

எஸ்.பி.பி. சரண் நேற்று மாலை வெளியிட்ட வீடியோவில் கூறியிருப்பதாவது: “ஒரு நல்ல செய்திக்காகக் காத்திருந்தோம். செயற்கை சுவாச உதவியை நீக்கும் அளவுக்கு அப்பாவின் நுரையீரல் செயல்பாடு முன்னேறும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்பா அந்த நிலைக்கு இன்னும் செல்ல வில்லை.

ஆனால் நல்ல செய்தி என்னவென்றால், அப்பாவுக்கு கொரோனா தொற்று இல்லை. இதற்கு முன், அப்பாவுக்குத் தொற்று இருக்கிறது, இல்லை என்பது முக்கியம் இல்லை என்று சொல்லியிருந்தேன். ஏனென்றால் நுரையீரல் சீக்கிரம் குணமாகும் என்று நாங்கள் எதிர்பார்த்தோம். அவை குணமாகி வருகின்றன. ஆனால் அதற்குச் சற்று நேரம் பிடிக்கிறது” என கூறி இருந்தார்.

இந்த நிலையில் இன்று காலை வெளியான தகவல்படி எஸ்.பி.பி.க்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய ஆலோசனை நடந்தப்படுவதாக கூறப்படுகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!