பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும்… கோரிக்கை வைத்த தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள்

முன்னணி இயக்குனரான பாரதிராஜாவுக்கு விருது வழங்க வேண்டும் என்று தேசிய விருது பெற்ற நடிகர்கள் இயக்குனர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

டைரக்டர் பாரதிராஜா நேற்று 78-வது பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்க வேண்டும் என்று மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு கமல்ஹாசன், மணிரத்னம், வைரமுத்து, பார்த்திபன், தனுஷ், சேரன், பாலா, பாண்டிராஜ், வசந்தபாலன், சமுத்திரகனி, எஸ்.தாணு, வெற்றிமாறன், ஜனநாதன், அகத்தியன் உள்பட 25 தேசிய விருது பெற்ற நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:- “இயக்குனர் பாரதிராஜா, தென்னிந்தியத் திரையுலகில் புதிய அலையைத் தொடங்கி வைத்தவர். 43 ஆண்டுகளுக்கு மேலாகத் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர். இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் 42 திரைப்படங்களை இயக்கியுள்ளார். சிவாஜி கணேசன், ராஜேஷ்கன்னா, கமல் ஹாசன், ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஸ்ரீதேவி, உள்ளிட்ட பல புகழ்பெற்ற நடிகர்களை இயக்கியவர்.

தமிழ் சினிமாவை முதன் முதலாக கிராமங்களுக்கு எடுத்துச் சென்றவர். 50-க்கும் மேற்பட்ட நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி உள்ளார். ஒட்டுமொத்த தமிழ் சினிமாத் துறையின் நலனுக்காக ஊக்கத்துடன் உழைத்து வருகிறார். பாரதிராஜாவுக்கு இந்திய சினிமாவின் மிக உயரிய விருதான “தாதாசாகிப் பால்கே” விருதை இந்த ஆண்டு வழங்குவதற்குப் பரிசீலிக்க வேண்டுகிறோம்.

இது அவருடைய மகத்தான பங்களிப்புக்கு உரிய நேரத்தில் வழங்கப்பட்ட முறையான அங்கீகாரமாகவும் இருக்கும்” இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பிறந்த நாளையொட்டி பாரதிராஜாவுக்கு நடிகர் சரத்குமார், இளையராஜா, வைரமுத்து, சீமான், சேரன், வெற்றி மாறன், நாஞ்சில் பி.சி. அன்பழகன் உள்பட பலர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!