தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் ரிலீசாகிறதா? – இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் விளக்கம்

தனுஷின் ஜகமே தந்திரம் ஓடிடி-யில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியான நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 100 நாட்களுக்கு மேலாக மூடிக்கிடப்பதையடுத்து திரைக்கு வர தயாராக இருந்த புதிய படங்களை தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பை மீறி நேரடியாக இணைய தளத்தில் ரிலீஸ் செய்து வருகிறார்கள். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின் படங்கள் ஓடிடி தளத்தில் வெளிவந்தன. அடுத்து மேலும் பல படங்கள் டிஜிட்டல் தளத்தில் வெளியாக தயாராகி வருகின்றன.

அந்தவகையில் தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை, டிஜிட்டலில் ரிலீஸ் செய்ய முயற்சிகள் நடப்பதாகவும், தனுசும் தயாரிப்பாளருக்கு லாபம் கிடைக்குமானால் இணைய தளத்தில் தாராளமாக ரிலீஸ் செய்யலாம் என்று ஒப்புதல் அளித்து விட்டதாகவும் செய்திகள் பரவின.

இந்நிலையில், அப்படத்தின் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளார். ஜகமே தந்திரம் படம் தியேட்டரில் தான் வெளியாகும் என கூறி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ஜெகமே தந்திரம் படத்தில் தனுசுடன் ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!