4 மொழிகளில் வெளியாகும் விஷாலின் சக்ரா

எம்.எஸ்.ஆனந்த் இயக்கத்தில் விஷால், ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ள சக்ரா திரைப்படம் தமிழ் உள்பட நான்கு மொழிகளில் வெளியாக உள்ளது.

விஷால் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் ‘சக்ரா’. எம்.எஸ்.ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். மேலும் ரெஜினா, ரோபோ சங்கர், சிருஷ்டி டாங்கே, மனோபாலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஷால் இப்படத்தில் ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி சார்பில் விஷால் தயாரித்துள்ளார்.

இந்நிலையில், இப்படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என 4 மொழிகளில் வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. பொதுவாக விஷால் படம் தெலுங்கில் மட்டுமே டப் செய்து வெளியிடப்படும். தற்போது சக்ரா படம் மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளும் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது.

இப்படத்தின் டிரெய்லரை வருகிற 27-ந் தேதி வெளியிட உள்ளனர். தமிழ் டிரெய்லரை ஆர்யா மற்றும் கார்த்தி வெளியிட உள்ளனர். மலையாள டிரெய்லரை மோகன்லாலும், தெலுங்கு டிரெய்லரை ராணாவும், கன்னட டிரெய்லரை யாஷும் வெளியிட உள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!