ரசிகர்களை வரவழைக்க திரையரங்கில் மது விற்கலாம்… பிரபல இயக்குனர் யோசனை

தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க திரையரங்குக்குள் மதுபானம் விற்பனை செய்ய அனுமதி வழங்க வேண்டும் என பிரபல இயக்குனர் யோசனை தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலால் தியேட்டர்கள் 2 மாதங்களாக மூடிக்கிடக்கின்றன. ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்ட பிறகு பழைய மாதிரி கூட்டம் வருமா? என்பது கேள்விக்குறியாக உள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து சில காலம் இருக்கும் என்றும், அதோடு வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது. எனவே தியேட்டர்கள் திறந்த பிறகும் உள்ளே ஒரு இருக்கையை காலியாக விட்டு சமூக விலகல் கடைப்பிடிக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் தியேட்டர் தொழிலை மீட்டெடுக்க தியேட்டர்களுக்குள் மதுபானம் வினியோகம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்று கீர்த்தி சுரேஷ் நடித்த ‘நடிகையர் திலகம்’ படத்தை இயக்கிய பிரபல இயக்குனர் நாக் அஸ்வின் கோரிக்கை வைத்துள்ளார்.

அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், “படம் பார்க்க ரசிகர்களை இழுக்க திரையரங்குகளுக்குள் பீர், ஒயின் போன்ற மதுபானங்களை விற்க லைசென்ஸ் வழங்க வேண்டும். இதன்மூலம் தியேட்டர் தொழிலை பாதுகாக்க முடியும். வெளிநாடுகளில் இதுபோல் திரையரங்குகளில் மதுபானங்களை விற்கும் முறை உள்ளது” என்று வற்புறுத்தி உள்ளார்.

தியேட்டர்களில் மதுபானம் கொடுத்தால் குடும்பத்தினர் படம் பார்க்க வரமாட்டார்கள் என்று சிலர் கருத்து தெரிவித்தனர். அதற்கு பதில் அளித்த நாக் அஸ்வின், ‘மல்டி பிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமாவது இதை அமல்படுத்தலாம்’ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!