2 மாத ஊரடங்கில் 11 கதைகளை ரெடி பண்ணிட்டேன் – மிஷ்கின்

கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருக்கும் இயக்குனர் மிஷ்கின், இந்த 2 மாத இடைவெளியில் 11 கதைகளை தயார் செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.

சித்திரம் பேசுதடி’, ‘அஞ்சாதே’, ‘யுத்தம் செய்’, ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பிசாசு’, ‘துப்பறிவாளன்’, ‘சைக்கோ’ உள்ளிட்ட தொடர் வெற்றி படங்களை இயக்கிய மிஷ்கின் அடுத்ததாக துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வந்தார். லண்டனில் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மிஷ்கின் படத்திலிருந்து விலகினார். மீதிப்படத்தை விஷால் இயக்க உள்ளார்.

இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் தான் 11 கதை தயார் செய்துள்ளதாக இயக்குனர் மிஷ்கின் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது: இந்த ஊரடங்கில் நான் புத்தகம் படிக்க அதிக நேரம் செலவிடுகிறேன். இதுதவிர பியானோ வாசிக்க கற்றுக்கொள்கிறேன். இந்த 2 மாத ஊரடங்கில் 11 கதைகளை தயார் செய்து வைத்துள்ளேன்.

சிம்பு படம் குறித்த கேள்விக்கு பதிலளித்த மிஷ்கின், அஞ்சாதே படத்தை பார்த்துவிட்டு எனது அலுவலகத்திற்கு வந்த சிம்பு, என்னுடன் பணியாற்ற விரும்பினார். சமீபத்தில் அவரை சந்தித்து கதை கூறினேன். கதை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு சிம்பு எனது படத்தில் நடிப்பார் என மிஷ்கின் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!