தயாரிப்பாளர்களின் சுமையை குறைத்த விஜய் ஆண்டனி…. ரூ.1 கோடி சம்பளத்தை விட்டுக்கொடுத்தார்

தயாரிப்பாளர்களின் சுமையை குறைக்கும் வகையில் நடிகர் விஜய் ஆண்டனி, தாமாக முன்வந்து ரூ.1 கோடி சம்பளத்தை விட்டுக்கொடுத்துள்ளார்.

கொரோனா வைரஸ் தமிழ் பட உலகை புரட்டி போட்டுள்ளது. தியேட்டர்கள் மூடல், படப்பிடிப்பு ரத்து போன்ற காரணங்களால் திரையுலகம் கடும் இழப்பை சந்தித்துள்ளது. வருகிற 17-ந் தேதிவரை ஊரடங்கை நீட்டித்துள்ளனர். அதன்பிறகு இயல்பு நிலை திரும்பி சினிமா உலகம் புத்துயிர் பெற எவ்வளவு நாட்கள் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

திரைக்கு வர தயாராக இருந்த 50 படங்கள் கொரோனாவால் வெளியாகவில்லை என்றும், இதன் மூலம் ரூ.500 கோடி முடங்கி இருப்பதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி வருகின்றனர். அதேபோல் பாதியில் நிற்கும் படங்களால் மேலும் ரூ.200 கோடி முடங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் விஜய் ஆண்டனி, தான் நடித்துவரும் படங்களுக்கான சம்பளத்தில் 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

விஜய் ஆண்டனி தற்போது பெப்சி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்ற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்ற படத்திலும், ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் ‘காக்கி’ என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும் திட்டத்தில் எடுக்கப்பட்டு வந்தன.

தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் இயல்பு நிலை திரும்பி மீண்டும் படப்பிடிப்பு தொடங்க இன்னும் சில மாதங்கள் ஆகலாம் என்ற நிலையில் விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தான் ஒப்புக்கொண்ட சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார். இந்த 3 படத்திற்காக அவர் சுமார் 1 கோடி ரூபாய் சம்பளத்தை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் ஆண்டனியின் இந்த அறிவிப்புக்கு தயாரிப்பாளர்கள் டி சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!