நடிகர் சங்க தேர்தல் வழக்கில் ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த ஆண்டு ஜூன் 23-ந் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதேநேரம், வாக்காளர் பட்டியல் முறையாக தயாரிக்கவில்லை என்று உறுப்பினர்கள் சிலர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இதை எதிர்த்து நடிகர் விஷால், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த ஐகோர்ட்டு, தேர்தலை திட்டமிட்டப்படி நடத்தவேண்டும். ஆனால், பதிவான ஓட்டுக்களை எண்ணும் பணியை மேற்கொள்ளக்கூடாது என்று உத்தரவிட்டார்.

இந்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 23-ந்தேதி தேர்தல் நடந்தது. இதற்கிடையே தபால் ஓட்டுக்களை போட அனுமதிக்கவில்லை என்பதால், தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உறுப்பினர்கள் சிலர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

இதையடுத்து, நடிகர் சங்க நிர்வாகத்தை கவனிப்பதற்கு பதிவுத்துறை உதவி ஐ.ஜி. கீதாவை தமிழக அரசு நியமித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் நாசர், கார்த்தி ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை எல்லாம் நீதிபதி கே.கல்யாணசுந்தரம் விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டிருந்தார்.

இந்தநிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் நடிகர் சங்கத்திற்கான மறு தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!