ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் மீது நடிகை மீடூ புகார்

ஆஸ்கார் விருது பெற்ற தயாரிப்பாளர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது ஹாலிவுட் நடிகை பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரையுலகில் பிரபல தயாரிப்பாளராக விளங்குபவர் ஹார்வி வெய்ன்ஸ்டீன் (வயது 67). இவர் தயாரித்த திரைப்படங்கள் ஏராளமான ஆஸ்கார் விருதுகளை வென்றுள்ளன. இவர் மீது ஹாலிவுட் நடிகைகள் முதல் சுமார் 80 பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை சுமத்தினர்.

இவற்றில் சில குற்றச்சாட்டுகள் தொடர்பாக நியூயார்க் போலீசாரால் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார். இவருக்கு எதிராக குற்றம் சுமத்திய பெண்களில் ஒருவர் 2013-ம் ஆண்டு ஹார்வி தன்னை பலாத்காரம் செய்தார் எனவும், மற்றொரு பெண் 2006-ம் ஆண்டு தன்னை பலாத்காரம் செய்தார் எனவும் கூறி இருந்தனர்.

இந்த 2 வழக்குகளின் விசாரணை நியூயார்க் மன்ஹாட்டன் கோர்ட்டில் கடந்த 6-ந்தேதி தொடங்கியது. இதற்கிடையே 1990 காலகட்டத்தில் ஹார்வி தன்னை கற்பழித்ததாக 59 வயதான நடிகை அனபெல்லா சியோரா புகார் கூறி இருந்தார். அனபெல்லா சியோரா, பாலியல் தொந்தரவுகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் துணிச்சலாக குற்றச்சாட்டுகளை முன்வைக்க தூண்டும் “மீடூ” இயக்கத்துக்கு உதவியவர்.

ஹார்வி மீதான வழக்கு விசாரணையின் போது அனபெல்லா சியோரா சாட்சியம் அளித்தார். அப்போது 1990-வது காலகட்டத்தில் மனிஹெட்டன் நகரில் உள்ள தனது வீட்டில் வைத்து தன்னை ஹார்வி கீழே தள்ளி வலுக்கட்டாயமாக கற்பழித்ததாக கூறினார். அவரிடம் ஹார்வியின் வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!