வன்மம் வைத்து அரசு பழி வாங்குகிறது, விஜய் தம்பி அஞ்சக் கூடாது: சீமான்

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதை மனதில் வைத்துக் கொண்டு தமிழக அரசு பழிவாங்குவதாக சீமான் தெரிவித்துள்ளார்.

விஜய்யின் பிகில் படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு தமிழக அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பிகில் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் யாரை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு வைக்க வேண்டும் என்று கூறி ஒரு குட்டிக் கதை சொன்னார். அந்த கதையை தமிழக அரசை மனதில் வைத்து தான் கூறினார் என்று பேச்சு கிளம்பியது.

இந்நிலையில் இது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் செய்தியாளர்களிடம் கூறியதாவது,

பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசியதற்காக வன்மம் வைத்து தான் தமிழக அரசு தற்போது பழி வாங்குகிறது. விஜய் பேசியதற்கு அமைச்சர்கள், அதிமுகவினர் என்று பலரும் எதிர் கருத்துகளை தெரிவித்துவிட்டனர்.

அத்துடன் இந்த விவகாரத்தை முடித்துக் கொள்ளாமல் பழி வாங்கும் எண்ணத்தில் ஓர் அரசு திரைப்படத்திற்கு இடையூறு செல்வது நல்லது இல்லை. இது போன்ற செயல்களால் இளம் தலைமுறையினருக்கு ஜனநாயகத்தின் மீது வெறுப்பு தான் ஏற்படும்.

முன்னதாக கத்தி, சர்கார் ஆகிய படங்களுக்கு அரசு தரப்பில் இருந்து நெருக்கடி கொடுக்கப்பட்டது. செல்வாக்குமிக்க கலைஞர்கள் சொல்வது சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதனால் தான் ஆட்சி, அதிகாரத்தில் உள்ளவர்கள் அதை பார்த்து அஞ்சி அவர்களுக்கு எதிராக செயல்படுகிறார்கள். அச்சுறுத்தப் பார்க்கிறார்கள். இதற்கெல்லாம் தம்பி விஜய் அஞ்சக் கூடாது என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!