ராட்சசி படக்குழுவினருக்கு விருந்து கொடுத்த மலேசிய கல்வி அமைச்சர்!

ஜோதிகா நடிப்பில் வெளியான ராட்சசி படத்திற்கு மலேசிய கல்வி அமைச்சர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இயக்குநர் கௌதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற படம் ராட்சசி. அரசுப் பள்ளி மற்றும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நிலையை இப்படம் அப்படியே வெளிக்காட்டியது. இப்படத்திற்கு பிறகாவது அரசுப் பள்ளிகளில் மாற்றம் ஏற்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக் இப்படத்திற்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், இப்படத்தின் மூலம், செய்ய வேண்டிய திட்டங்கள், மாற்றங்கள் பற்றி அனைவருக்கும் புரிய வைத்திருக்கிறார்கள். நாட்டில் கல்வியை வளர்ப்பதே அந்நாட்டின் முக்கிய கடமை. அதைத்தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம். மேலும், கல்வியின் மகத்துவம் பற்றி அறியச் செய்த இப்படத்திற்கும், இப்படத்தில் தலைமை ஆசிரியையாக நடித்த ஜோதிகாவிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இதற்கு ஜோதிகாவும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: ஒரு இந்தியப் படத்தின் மூலம் தங்கள் நாட்டில் மாற்றத்தை கொண்டு வர விரும்பும் தங்களுக்கு வாழ்த்துக்களுடன் நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராட்சசி படக்குழுவினரை நேரில் பாராட்டும் வகையில், அவர்களை மலேசியா அழைத்துள்ளார். ராட்சசி படக்குழுவினருடன் மலேசிய கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக், கல்வித்துறை துணை அமைச்சர் ஒய்பி டியோனி சிங் ஆகியோர் அங்குள்ள டிஜிவி சேத்தியாவாக் மாலில் உள்ள ஆர்ஜிவி திரையரங்கில் ராட்சசி படத்தை பார்த்து மகிந்துள்ளனர்.

இதன் பிறகு ராட்சசி படக்குழுவினருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு, இயக்குநர் கௌதம் ராஜ் ஆகியோர் பலர் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!