“அஜித் நீங்க ஒரு அதிசயம்னு சொன்னதுக்கு, அவர் ரியாக்‌ஷன்!?” – விவேக்

நான் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஏதோ சிவாஜி சாரை நான் இழித்துப் பேசியதாகத் திரித்துச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?

தமிழ்நாட்டில் தமிழ் இனத்தில் பிறந்துவிட்டு ஒருவர் நடிகர் திலகம் சிவாஜியைப் பழித்துப் பேசியிருக்கிறார், என்று சொல்வதும் நினைப்பதும் பைத்தியக்காரத்தனம். விவேக் பேசியிருக்கிறான் என்று சொன்னால் அதைவிட ஒண்ணாம் நம்பர் பைத்தியக்காரத்தனம் வேறு எதுவும் இல்லை. காதலாகி கசிந்துருகி நான் நேசித்த மகா கலைஞன் சிவாஜி. பொதுவாக அழுகை ஆன்மாவைச் சுத்தப்படுத்தும். மனம் விட்டு அழுவது ஒரு தியான நிலை. கண்ணீர்விட்டுக் கதறி அழுதால் மனசும், உடம்பும் லேசாகும். எனக்கு எப்போதாவது மனச்சங்கடம் ஏற்பட்டால் சிவாஜி நடித்த `பாபு’ படத்தைத் திரையிட்டுப் பார்ப்பேன். எந்தக் கலைஞனாலும் தொடமுடியாத உச்சத்தில் நிற்கும் உன்னதமான கலைஞன் சிவாஜி. அவரைப்போய் நான் குறைவாகப் பேசுவேனா?

விஜய்யின் `பிகில்’ விழாவுக்குப் போனபோது அங்கே கூடியிருந்த கூட்டத்தைப் பார்த்து மிரண்டு போனேன். எம்.ஜி.ஆர் `என் ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புகளே’ என்று சொல்லும்போதும், சிவாஜி `என் கண்மணிகளே’ என்று பேசும்போதும், பாரதிராஜா `என் இனிய தமிழ் மக்களே’ என்று அழைக்கும்போதும் எப்படி ஒரு கைதட்டல் எழுமோ அதுபோல விஜய் `என் நெஞ்சில் குடியிருக்கும்’ என்று சொன்னபோது கூட்டம் ஆர்ப்பரித்தது.

`60 ஆண்டுகளுக்கு முன்பு `இரும்புத்திரை’ படத்தில் நடிகர் திலகம் `நெஞ்சில் குடியிருக்கும்’ என்ற பாடலைப் பாடும்போது காதல் உணர்வைக் கொடுத்தது. இப்போது விஜய் `நெஞ்சில் குடியிருக்கும்’ என்று அதே வார்த்தையை ரசிகர்களைப் பார்த்துப் பேசும்போது வேறு உணர்வை ஏற்படுத்துகிறது’ என்றுதான் பேசினேன்…

நான் பேசியதைத் தவறாகப் புரிந்துகொண்டு ஏதோ சிவாஜி சாரை நான் இழித்துப் பேசியதாகத் திரித்துச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்? தமிழ் மண்ணில் பிறந்த நான் அப்படிப் பேசுவேனா? என்று யோசிக்க வேண்டும். சிவாஜி சாரை எத்தனைமுறை உயர்த்திப் பேசியிருக்கிறேன் அப்போது எல்லாம் என்னைப் பாராட்டி போஸ்டர் ஒட்டி இருக்கிறீர்களா?

நான் என்ன தவறு செய்தேன். உங்களை எல்லாம் சிரிக்க வைக்கும் என்னை நீங்கள் அழவைக்கலாமா? என் அப்பா, அம்மா, மகன் எல்லோரையும் இழந்துவிட்டு அநாதையாக நிற்கும் எனக்கு ஆறுதலாக இருப்பது என் ரசிகர்கள் மட்டும்தான். அவர்களிடம் என்னைப்பற்றித் தவறான கருத்தை விதைப்பது எந்த விதத்தில் நியாயம்?” படபடவெனப் பேசுகிறார் நடிகர் விவேக். `பிகில்’ சர்ச்சை பேச்சு குறித்துப் பேசியவரிடம் வடிவேலு பற்றிக் கேட்டேன்.

“தமிழ்மண்ணின் மிகச்சிறந்த கலைஞன் வடிவேலு. என்னுடைய மகள்கள் வடிவேலுவின் பரமரசிகைகள். பலமுறை என் வீட்டுக்கு உரிமையோடு வந்து என்னிடமும், என் குடும்பத்தாரிடமும் பேசியிருக்கிறார். நானும், அவரும் `வாடா.. போடா…’ நண்பர்கள். சக கலைஞனாக வடிவேலு எனக்குப் போட்டியாளன்தான். அவர் முன்பு மாதிரி நடிக்க முடியாமல் சிலபல காரணங்கள் தடுத்து வருகின்றன. வடிவேலு சினிமாவுக்கு எதற்காக வந்தார். மக்களை மகிழ்விப்பதற்காக. மறுபடியும் சினிமாவுக்கு வந்து மக்களை வயிறு குலுங்கச் சிரிக்க வைக்கவேண்டும். வடிவேலு இருந்த இருக்கை அப்படியே காலியாகத்தான் இருக்கிறது. அவர் எப்போது வருவார் என்று வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டு இருக்கிறது சமூகம்.

பொதுவாக மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படும்போது வயிறு குலுங்க சிரிக்க வைப்பவர் வடிவேலு. அவரே டென்ஷன் ஆகிவிடக்கூடாது. அவரது மனசு வேறு எதையோ தேடி ஓடிவிடக்கூடாது. மறுபடியும் வடிவேலு மக்களை மகிழ்விக்க நடிக்க வரவேண்டும். வடிவேலுவுடன் சேர்ந்து நடிப்பதற்கு நான் ஆசையோடு காத்துக்கொண்டிருக்கிறேன்” என்றவரிடம் அஜித்துடன் நடிக்கும் அனுபவம் சொல்லுங்கள் என்றேன்.

“நான் ஆரம்பத்திலிருந்தே இருந்தே விஜய், அஜித்தைக் கவனித்து வருகிறேன். இருவரும் சாதாரணமாக இப்போதுள்ள இடத்தை அடைந்துவிடவில்லை. மிக அதிகமாக உழைத்துக் கஷ்டப்பட்டுத்தான் உயர்ந்து நிற்கிறார்கள். அஜித்தைப் பொறுத்தவரை முதலிலேயே ‘நான் சினிமாவில் எனக்கென ஒரு தனியிடத்தைப் பிடிப்பேன்’ என்று தீர்க்கமான முடுவெடுத்த பிறகே நடிப்பில் கவனம் செலுத்தினார். `என்னை இப்படித்தான் வைத்துக்கொள்வேன், யாருக்கும் எந்தத் தீங்கும் செய்யமாட்டேன், எவருக்கும் தொந்தரவு தராமல் நான் விரும்பும் வாழ்கையை அமைத்துக் கொள்வேன்’ என்பதில் யாரிடமும் சமரசம் ஆகாமல் ஸ்திரமான முடிவோடு இருந்துவருகிறார்.

அவரால் முடிந்த உதவிகளை மற்றவர்களுக்குச் செய்து இருக்கிறாரே தவிர இதுவரை யாருடைய வாழ்கையையும் அஜித் கெடுத்ததே இல்லை. அஜித் உடம்பில் எத்தனை ஆபரேஷன், எவ்வளவு போராட்டங்கள் எல்லாவற்றையும் தாண்டி இப்போது எல்லோரும் ‘தல.. தல..’ என்று கொண்டாடும் அளவுக்குக் கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதை பிரமிப்பாக பார்க்கிறேன். சினிமாவில் எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாமல் அமைதியாக வாழ்கிறார். அவர் நடித்த திரைப்படம் வெளிவரும்போது மட்டும் சினிமா உலகமே அல்லோலகல்லோலப்படுகிறது.

ஒருமுறை விமானத்தில் அஜித்தைச் சந்தித்தபோது `அஜித் நீங்க என்ன செய்தாலும் ரசிக்கிறார்கள். ஒரு ஹீரோ என்பவன் நல்லவனாக இருக்க வேண்டும். ‘மங்காத்தா’ படத்தில் மது அருந்திக்கிட்டே இருக்குறீங்க, ஹீரோயினை காரிலிருந்து தூக்கி வீசுறீங்க. எல்லாத்தையுமே மாற்றி மாற்றி செய்யுறீங்க. ஆனாலும் உங்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுறாங்க. அஜித் நீங்க ஒரு அதிசயம்’னு சொன்னேன்.

`விவேக் இந்த உலகமே ஒரு அதிசயம். வெறும் காற்றை மட்டும் நம்பி நாம் விமானத்தில் பறந்துகொண்டு இருக்கிறோம். நமக்குக் கீழே உள்ள உலகம் எத்தனை ஆண்டுகளாகச் சுழல்கிறது’ என்று பதில் சொல்லி என்னை ஆச்சர்யப்படுத்தினார். அஜித்துக்குள் ஒரு நேர்மை, சத்தியம் ஒளிந்துகொண்டு இருக்கிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!