’எனை நோக்கிப்பாயும் தோட்டா’ வெளியாவதில் மீண்டும் சிக்கல்

மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக்கிடக்கும் தனுஷ், கவுதம் மேனன் கூட்டணியின் ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’ படம் கடந்த இரு வாரங்களுக்கு முன் சென்ஸார் ஆகியுள்ள நிலையில், படம் ரிலீஸாவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.2016ல் துவங்கப்பட்ட படம் ‘எனைநோக்கி பாயும் தோட்டா’.திரைக்கு சுடச்சுட அதே ஆண்டு பாய்ந்திருக்கவேண்டிய தோட்டா இயக்குநருக்கும் கவுதம் மேனனுக்கும் இடையே ஏற்பட்ட நிதி தொடர்பான மோதலால் தாமதமானது. தனக்கும் சம்பள பாக்கி இருந்ததால் மற்ற பட வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்த தனுஷ் அடுத்து ’வேலை இல்லா பட்டதாரி-2’, ’ப.பாண்டி’, ’வடசென்னை’ ஆகிய படங்களில் தனுஷ் நடிக்க , அவை திரைக்கும் வந்துவிட்டன. தற்போது இயக்குநர் வெற்றிமாறனின் ‘அசுரன்’ படத்தில் முழுமூச்சாக நடித்து வருகிறார்.

கவுதம் மேனனும் ஒரு குறிப்பிட்ட காலம் காத்திருந்துவிட்டு விக்ரம் நடித்த ’துருவ நட்சத்திரம்’ படத்தை எடுத்தார். ஒருவழியாக கடந்த வருடம் ஜூலை மாதம் 16-ந் தேதி எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி அனைத்து பணிகளும் முடிந்தன. அந்த சமயம் தனக்கு சம்பள பாக்கி இருந்ததால் தனுஷ் டப்பிங் பேச மறுக்க, அவரது குரலுக்கு இயக்குநர் கவுதமே டப்பிங் பேசிய தகவலும் வெளியாகி பரபரப்பானது. பின்னர் பணம் செட்டில் ஆனபின்னர் தனுஷ் டப்பிங் பேசினார். அடுத்து தணிக்கை குழுவும் படத்தை பார்த்து யூஏ சான்றிதழ் வழங்கி உள்ளது.

தற்போது படத்தை வெளியிட படக்குழுவினர் தயாரானபோது மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு ’எனை நோக்கி பாயும் தோட்டா’ இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 28-ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.