கந்துவட்டிக்காரருடன் சேர்ந்து கொலைமிரட்டல் விடுத்த விவகாரம்!கருணாகரன் விளக்கம்

பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன், படத்தின் இணை தயாரிப்பாளர் விஜய் ஆனந்த் ஆகியோர் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கருணாகரன் மீது கடந்த 9-ம் தேதி புகார் அளித்தனர்.

அந்த புகாரில் கருணாகரன் ‘பொதுநலன் கருதி’படத்தில் நடிக்க ரூ. 25 லட்சம் முழுமையாக பெற்றுக்கொண்ட பிறகு பின்னணி குரல் கொடுத்ததாகவும், பின்னர் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் புரமோஷன் உள்ளிட்டவற்றிற்கு அழைத்த போது வரவில்லை என்றும் கூறப்பட்டு இருந்தது.

மேலும் கருணாகரன் கந்து வட்டிக்காரர்கள் மிரட்டும் தொனியிலேயே மிரட்டுவதாகவும் படத்தின் இயக்குநர் தெரிவித்திருந்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்து கருணாகரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் , பொதுநலன் கருதி பட இயக்குநர் சீயோன் மற்றும் அதன் இணைத் தயாரிப்பாளர் என்னைப் பற்றிச் சொல்லும் குற்றச்சாட்டுகள் முழுவதுமே உண்மை இல்லை.

படத்தின் இசைவெளியீட்டு விழா பிப்ரவரி 4-ம் தேதி நடைபெற உள்ளதாக சொல்லி என்னை அவர்கள் அழைத்ததே பிப்ரவரி 1-ம் தேதி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9 மணிக்குத் தான். கால அவகாசம் குறைவாக இருந்ததால் முன்னதாக ஒப்புக்கொண்ட பணிகளை ஒதுக்கிவைக்க முடியவில்லை. இவற்றையெல்லாம் தெளிவாக இயக்குநரிடமும், இணை தயாரிப்பாளரிடமும் கூறியிருந்தேன். படப்பிடிப்புப் பணிகள் முடிந்து நான் சென்னைக்கு வந்ததே பிப்ரவரி 8-ம் தேதிதான். நான் வேண்டுமென்றே ஆடியோ ரிலீசுக்கு வரவில்லை என்று அவர்கள் என்மீது குறை சொல்கிறார்கள். அது உண்மையில்லை.

கருணாகரனால் அனுப்பப்பட்ட மர்ம நபர்கள் தாக்க முயற்சித்தனர் என்றும் படத்தின் டீசர் வெளியான நவம்பர் 27-ம் தேதி அன்றே கந்துவட்டிக் கும்பல் இயக்குநரை தொலைபேசியில் மிரட்டியதாகவும் பிப்ரவரி 9 அன்று புகார் கொடுத்திருக்கிறார்கள். இதுதொடர்பாக நான் தெரிவிக்க விரும்புவது பின்வருமாறு:

எனக்கும் எந்த கந்துவட்டிக்காரருக்கும் தொடர்பு ஏதும் இல்லை. ஏனெனில் நான் அப்படி வளரவில்லை. எனது தந்தை காளிதாஸ் தேசத்தின் பாதுகாப்புக்காக உழைக்கும் மத்திய அரசின் முக்கிய துறையில் பணியாற்றி விருது பெற்றவர். இவர்கள் குறிப்பிட்டிருப்பது போன்ற வழிகளில் நான் வளர்க்கப்படவில்லை. கந்துவட்டிக்காரர்களுடன் இணைந்து படத்துக்கு எதிராக செயல்படுவதாகக் கூறுவதில் எள்ளளவும் உண்மையில்லை.

கடனால் பாதிக்கப்பட்ட பல விவசாயிகளுக்கும், புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உதவி செய்திருக்கும் என்னைக் கந்துவட்டிக் கும்பலுடன் தொடர்புபடுத்திப் பேசுவது வேதனை அளிக்கிறது. எனக்கும் சமூக உணர்வு இருக்கிறது. கந்துவட்டிக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு வன்முறையை நம்பி வாழும் தேவையில் நான் இல்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்” இவ்வாறு நடிகர் கருணாகரன் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.