அப்பா வயது நடிகர் என்னை குளியல் அறையில் வைத்து கட்டிப்பிடித்தார்.. மீ டூ மூலம் நடிகை புகார்..!!


‘வேறென்ன வேண்டும்’ என்ற திரைப்படம் மூலம் தமிழ்த் திரை உலகில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் பிரெர்னா கண்ணா.

தெலுங்கு நடிகையான இவர் மீ டூ இயக்கம் பற்றி அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

நான் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போது ‘ராமா ராமா கிருஷ்ணா கிருஷ்ணா’ என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். படம் வெற்றிபெற்றது. அதைத் தொடர்ந்து நல்ல வாய்ப்புகள் வரத் தொடங்கின.

என்னைத் திரையுலகில் வழிநடத்த யாரும் இல்லை. இந்த துறைக்கு நான் புதியவள். ஒருமுறை ஐதராபாத்திலிருந்து ஒரு நடிகர் என்னை அழைத்தார். ஒரு படத்தை இயக்க உள்ளதாகவும், ஒரு கதாபாத்திரத்திற்காக என்னை தேர்வு செய்ய வேண்டும் என்றும் கூறினார். சிகப்பு நிறச் சேலையில், ஈரமான முடியுடன் 5 நட்சத்திர விடுதிக்கு வரச் சொன்னார்.


என் அம்மாவை உடன் அழைத்துவரக் கூடாது என்பதை வலியுறுத்தி கூறினார். ஆனால் அதிர்ஷ்ட வசமாக நான் என் அம்மாவை அழைத்துச் சென்றேன்.

நாங்கள் அறையில் இருந்தபோது எனது ஐ லைனரை நீக்கச் சொன்னார். ஐ லைனர் இல்லாமல் எனது முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க விரும்புவதாக கூறினார். நான் கழிவறைக்கு ஐ லைனரை அழிக்கச் சென்றபோது, அந்த நடிகர் என் அம்மாவிடம் முகம் கழுவிவிட்டு வருவதாகக் கூறியுள்ளார்.

நான் என் கண்ணை துடைத்துக் கொண்டிருக்கும் போது, அவர் திடீரென்று கண்ணாடியை நோக்கி என்னைத் தள்ளியபடி கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க முயன்றார். நான் மிகவும் பயந்துபோய் அவரை தள்ளினேன். இவை அனைத்தும் சில விநாடிகளில் நடந்து முடிந்தன. பின்னர் அவர் என்னை மிரட்டத் தொடங்கினார்.

எனது அப்பா வயதுள்ள ஒருவர் இப்படி நடந்து கொண்டது கவலையும் ஆச்சரியத்தையும் தந்தது. அவருக்கும் ஒரு மகள் இருக்கிறாள்.

தமிழ் சினிமாவில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு இயக்குனர், எனது விவரங்கள் மற்றும் புகைப்படங்களைப் பார்த்த பின்னர் எனது மேனேஜரின் அலுவலகத்துக்குத் தொடர்புகொண்டார்.


நான் அவருடன் இணக்கமாகச் சென்றால் கதாநாயகியாக நடிக்கவைப்பதாக எனது மேனேஜரிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார். நான் கோபத்துடன் திட்டி அவரது அலுவலகத்தில் இருந்து வந்தேன்.

பெண்கள் இணக்கமாகப் போவதால்தான் பெரிய படங்களில் பணியாற்றுகின்றனர் என்று சிலர் கூறுகின்றனர். இந்த மனப்போக்கை ஊக்குவிக்க முடியாது.

இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் எனப் பலரும் தற்போது பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நிற்கின்றனர். ஒரு பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமையை வெளியில் சொல்வதற்கு முன்னர் மூன்று முறை யோசிப்பாள்.

அப்படி வெளியில் சொல்லும்போது அவளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். மீ டூ இயக்கம் ஒவ்வொரு பாலினத்தவரும் தங்களை அதிகாரம், பணம், செல்வாக்கு ஆகியவற்றின் மூலம் பாலியல் கொடுமைக்கு ஆளாக்குபவர்களிடம் இருந்து தற்காத்துக்கொள்ள உருவாகியுள்ளது. ஆண்களும், ஓரின சேர்க்கை சமூகத்தினரும் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளைப் பேச முன்வர வேண்டும். மீ டூ இயக்கம் பெண்களுக்கானது மட்டுமல்ல ஒவ்வொரு தனிமனிதருக்குமானது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!