முன்பெல்லாம் சூட்டிங்கா என்பார்கள்.. இப்போதெல்லாம் போலீஸ் ஸ்டேஷனா என்கிறார்கள்- நடிகர் சூரி

நகைச்சுவை நடிகர் சூரியிடம், நிலம் வாங்கி தருவதாக பண மோசடி செய்யப்பட்டது தொடர்பான வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து வருகிறார்கள். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் இந்த விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே இது தொடர்பாக ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகர் சூரி இந்த வழக்கு தொடர்பாக 3 முறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆகி விளக்கம் அளித்தார். நேற்று 4-வது முறையாக நடிகர் சூரி கமிஷனர் அலுவலகத்தில் ஆஜர் ஆனார். அவரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். சுமார் 2 மணி நேரம் அவரிடம் இந்த விசாரணை நடந்தது. பின்னர் அவர் புறப்பட்டு சென்றார்.

முன்னதாக அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, நான் புகார் கொடுத்த போது இந்த கமிஷனர் அலுவலகம் வந்தேன். அதன் பிறகு பலமுறை இங்கு வந்துள்ளேன். திருப்பி, திருப்பி விசாரிக்கிறார்கள். போலீஸ் துறை, நீதித்துறை, கடவுள் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நிச்சயம் எனக்கு நியாயம் கிடைக்கும். முன்பெல்லாம், வீட்டில் இருந்து கிளம்பும் போது, சூட்டிங் போறீங்களா, என்று என்னிடம் கேட்பார்கள். இப்போது வெளியில் கிளம்பும் போது, போலீஸ் நிலையம் போறீங்களா என்று கேட்கிறார்கள். எனது கனவில் கூட போலீஸ் நிலையம்தான் வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் அவரது தந்தை ஓய்வு பெற்ற போலீஸ் டி.ஜி.பி.ரமேஷ் கொடவாலா ஆகியோரிடமும் விசாரணை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.








  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!