நான் மிருகமாய் மாற – விமர்சனம்

சவுண்ட் இன்ஜினியரான பூமிநாதன் (சசிகுமார்) தனது மனைவி, தம்பி, தங்கை, மகள், அப்பா, அம்மா என்று ஆனந்தமான குடும்பத்தில் வாழ்ந்து வருகிறார். அண்ணன் பூமிநாதனை கூட்டி வருவதற்காக செல்லும் தம்பி, வரும் வழியில் சில ரவுடிகள் சேர்ந்து ஒருவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்கள். காயப்பட்ட அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கிறார்.   இதனிடையில் தம்பியை தொடர்பு கொள்ளும் பூமிநாதனிடம் சிறிது நேரத்தில் வந்துவிடுவேன் என்று கூறி அவரும் வருகிறார். கொலை செய்ய முயற்சித்த நபரை தம்பி காப்பாற்றியதால் கோபத்தின் உச்சிக்கு செல்லும் ரவுடிகள் இவரிடம் அவரை அனுமதித்த மருத்துவமனையை பற்றி கேட்கிறார்கள். இதனை தெரிவிக்க மறுக்கும் தம்பியை கொலை செய்கின்றனர்.   

தன் கண் முன்னே தம்பியை சில ரவுடிகள் கொலை செய்துவிடுவதை பார்க்கும் அண்ணன் பூமிநாதன் இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் அந்த ரவுடிகளை வேட்டையாட தொடங்குகிறார். இறுதியில் தனது தம்பியை கொலை செய்தவர்களை பூமிநாதன் பழிதீர்த்தாரா? இதிலிருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார்? குடும்பத்தை எப்படி காப்பாற்றினார்? என்பதே படத்தின் மீதிக்கதை.  

படத்தின் மையக் கதாபாத்திரத்தை தாங்கி நிற்கும் சசிகுமாரின் நடிப்பில் உணர்வு இல்லை. புதுமுக நடிகர் போன்ற முகபாவனைகள் தெரிகிறது. கோபத்துடன் எதிரியிடம் பேசும் வசங்கள் திரும்ப திரும்ப வருவது போன்று இடம்பெற்று அலுப்பை ஏற்படுத்துகிறது. அழுகை, விரக்தி, இயலாமை, கோபம் என அனைத்திலும் ஒரே மாதிரியான முகபாவனைகள் தென்படுகிறது.    இதனால் சசிகுமாரின் கதாப்பாத்திரம் பார்வையாளர்களுடன் ஒன்றினையவில்லை. நாயகியாக வரும் ஹரிப்ரியா அழுகிற காட்சிகளில் மட்டுமே ரசிக்க வைத்திருக்கிறார். அவர் நடிப்பில் இன்னும் கவனம் செலுத்த வேண்டும். அம்மாவாக நடித்திருக்கும் தேர்ந்த நடிகர்களின் நடிப்பும் எதார்த்ததிற்கு மாறாக உள்ளதால் ரசிக்கும்படி இல்லை.

இயக்குனர் நினைத்தது போன்று நடிப்பை வெளிப்படுத்த நினைத்திருப்பதால் இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்கலாம் என்ற எண்ணம் தோன்ற வைக்கிறது.   கொட்டும் மழை, சொட்டும் ரத்தம் என ஒளிப்பதிவில் காட்சிப்படுத்த முயற்சித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாச்சார்ஜி. இன்னும் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். பாடல் இல்லாத படம் என்றாலும் இயற்கையான சத்தத்தை மட்டுமே ஒலிக்க வைத்து கவனம் ஈர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.   மொத்தத்தில் நான் மிருகமாய் மாற – மாறாமல் இருக்கலாம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!