தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சை தான் – நடிகர் போஸ் வெங்கட்

ஈரநிலம்’ படத்தில் அறிமுகமாகி 60-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்ர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான ‘கன்னி மாடம்’ படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் சாதி மற்றும் ஆணவக் கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது மா.பொ.சி. என்ற புதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக விமல் நடிக்கிறார். இதில் கன்னிமாடம் படத்தில் கதாநாயகி சாயா தேவி நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்திரங்களில் சரவணன் மற்றும் நடிகை ரமா நடிக்கவுள்ளனர். தயாரிப்பாளர் சிராஜ் இப்படத்தை தயாரிக்க இனியன் ஒளிப்பதிவையும் இசையை சித்து குமாரும் கவனிக்கிறனர்.

இப்படம் பற்றி இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, மா.பொ.சி. என்றதும், மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம் பெயர் தான் நினைவிற்கு வரும். ஆனால், தலைப்பு அதுவல்ல. மா என்ற எழுத்தில் துணைக்கால் சேர்த்து தலைப்பு போட்டதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளது. அதைத் தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என்று நினைக்கிறேன்.

மாங்கொல்லை பொன்னரசன் சிவஞானம் என்று வைத்திருந்தோம், அது பெரிய தலைப்பாக இருக்கிறது என்று சுருக்கி மா.பொ.சி. என்று வைத்தோம். ஒருவேளை ம.பொ.சி அவர்களை நினைவுபடுத்தினால் தமிழுக்குச் செய்யக் கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும். நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாகத்தான் இப்படம் இருக்குமே தவிர, கலங்கப்படுத்தும் படமாக இருக்காது. அரசியல் காழ்ப்புணர்ச்சி எனக்கு கிடையாது. கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். இப்படம் ம.பொ.சி. ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாகத்தான் இருக்கும் என்றார்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!