லால் சிங் சத்தா – விமர்சனம்

அமீர்கான் சிறுவயதிலிருந்தே நடக்க முடியாதவர் மற்றும் புரிதல் இல்லாதவர். அவரது தாயார் தொடர்ந்து அவரை ஊக்கப்படுத்துகிறார். பின்னர் அமீர்கான் கரீனா கபூரை சந்திக்கிறார். சிறுவயதில் 10 ரூபாய்க்கு தாயை இழந்த கரீனா, பின் அமீர்கான் வீட்டில் தங்க வருகிறாள். இருவரும் ஒன்றாகப் படிக்க பள்ளிக்குச் செல்கிறார்கள்.

கரீனாவின் ஒவ்வொரு செயலும் அமீர்கானை மகிழ்விக்கிறது. கரீனாவும் அவரை ஊக்குவிக்கிறார், ஒரு சம்பவத்திற்குப் பிறகு அமீர்கான் நடக்கவும், ஓடவும் கற்றுக்கொள்கிறார். ஆனால் புரிதல் மட்டும் அமீர்கானிற்கு குறைவாக இருக்கிறது. ஒரு கட்டத்தில் அமீர்கான், கரீனா இவர்களின் கனவு வெவ்வேறு திசையில் பயணிக்கிறது. இருவரும் பிரிகிறார்கள்.

இறுதியில் அமீர்கான், கரீனா கபூர் சந்திப்பு நடந்தா? இவர்களின் கனவு பாதை எப்படி சென்றது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் அமீர்கான் மாஸ் ஹீரோ என்ற இமேஜை ஓரம் தள்ளிவிட்டு கதாப்பாத்திரத்திற்கு ஏற்ப தன்னை கச்சிதமாக மாற்றிக்கொண்டு படம் முழுவதும் லால் சிங் சத்தா என்ற கதாப்பாத்திரமாகவே மாறி வாழ்ந்திருக்கிறார். குழந்தைத்தனத்துடனும், அப்பாவியாகவும் நடித்து அனைவரையும் அனுதாபப்பட வைக்கிறார், சில இடங்களில் அழவும் வைக்கிறார்.

கரீனா ஏமாற்றம், தோல்வி, விரக்தி, காதல் என தனது நடிப்பாற்றலை முழுமையாக வெளிப்படுத்தி உள்ளார். ஒவ்வொரு முறையும் தனது கனவு நிறைவேறாத போது, களங்கும் இடம் அசத்தல். அழகில் மட்டும் இன்றி நடிப்பிலும் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் கரீனா.

அமீர்கானுடன் ராணுவத்தில் பணியாற்றும் நாக சைதன்யா, அமீர்கானின் அம்மாவாக நடித்துள்ள மோனல் சிங் ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.

‘லால் சிங் சத்தா’ திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை வென்ற ‘பாரஸ்ட் கம்ப்” படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். பாரஸ்ட் கம்ப் படத்தை சரியான ரீமேக் படம் போல உருவாக்கி இருக்கிறார் இயக்குனர் அத்சவத் சந்தன். இந்திய ரசிகர்களுக்கு ஏற்றவாறு பல மாற்றங்கள் திரைக்கதையில் செய்திருக்கிறார். சாதாரண டிவி நடிகராக இருந்து பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாராக உயர்ந்திருக்கும் ஷாருக்கானின் வளர்ச்சியை லால் சிங் சத்தாவின் வாழ்க்கை சம்பவத்தோடு இணைத்திருப்பது படத்தின் கூடுதல் பலம்.

பிரீதம் இசையில் தமிழ்ப் பாடல்களும், பின்னணி இசையும் ரிசிக்க வைக்கின்றன. கேமராமேன் சத்யஜித் பான்டே இந்தியாவின் பல பகுதிகளை தன் கேமராவில் மிக அழகாக பதிவு செய்துள்ளார்.

மொத்தத்தில் ‘லால் சிங் சத்தா’ சிறப்பு.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!