நடிகர் சூர்யா மீது தொடர்ந்த வழக்கு.. உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு..

நடிகர் சூரியாவின் 2டி தயாரிப்பு நிறுவனம் தயாரித்த ஜெய்பீம் திரைப்படத்தை இயக்குனர் ஞானவேல் இயக்கியிருந்தார். சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்திருந்தனர். கடந்த ஆண்டு ஓடிடியில் வெளியான ஜெய் பீம் திரைப்படத்தில் வன்னியர் சமுதாய மக்களை அவமதிக்கும் நோக்கத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக புகார்கள் எழுந்தன.

இதையடுத்து குறிப்பிட்ட அந்த காட்சி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது. இது தொடர்பாக இயக்குனர் ஞானவேல் மன்னிப்பு கோரியிருந்தார். அதன்பின் ஜெய்பீம் திரைப்படம் ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் உள்ளதாக கூறி நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது வேளச்சேரி போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர். ஸ்ரீருத்ர வன்னியர் சேவா அமைப்பு சார்பில் சந்தோஷ் என்பவர் அளித்த புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதன் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் ஜெய்பீம் பட இயக்குனர் ஞானவேல் மற்றும் நடிகர் சூர்யா தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதிஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த புகாரை தாக்கல் செய்யும் முன்பே படத்தில் இடம் பெற்றிருந்த சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்ட சமுதாயத்தினரை இழிவுப்படுத்தும் வகையிலான காட்சிகள் அமைக்கப்பட்டிருப்பதாக கூறுவதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் வாதிடப்பட்டது. இந்த வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதி நடிகர் சூர்யா மற்றும் ஞானவேல் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!