கார்கி – விமர்சனம்

ஒரு பள்ளியில் ஆசிரியையாக பணிந்துக் கொண்டு தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருபவர் கார்கி (சாய் பல்லவி). அவர் விரும்பும் காதலரை மனம் முடிப்பதற்காக பெற்றோரின் சம்மத்துடன் திருமணத்திற்காக காத்திருக்கிறார்.

இதனிடையில் அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்றில் நான்கு வடமாநில இளைஞர்களால் ஒன்பது வயது சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படுகிறார். இந்த வழக்கின் விசாரணையில் ஐந்தாவது நபராக காவலாளியாக பணிபுரிந்துக் கொண்டிருக்கும் சாய் பல்லவியின் தந்தை சேர்க்கப்படுகிறார். இதில் மன உலைச்சலுக்கு ஆளாகி பல பிரச்சனைகளை அவர் எதிர்கொள்கிறார்.

தனது தந்தை நிரபராதி என நம்பும் சாய் பல்லவி இந்த வழக்கில் இருந்து தந்தையை விடுவிக்க சட்ட ரீதியாக போராடுகிறார். சாய் பல்லவியின் போராட்டம் வெற்றி பெற்றதா? பாலியல் குற்றத்தில் ஈடுப்பட்ட அந்த ஐந்தாவது நபர் யார்? பாதிப்புக்குள்ளாகும் குடும்பங்களும் அவர்களை சுற்றியுள்ளவர்களும் எந்த மாதிரியான மன நிலைக்கு உள்ளாகிறார்கள்? என்பதே படத்தின் மீதிகதை.

அவலங்களை தோலுரித்து காட்டும் கதையை தேர்வு செய்து சரியாக கையாண்டிருக்கும் இயக்குனர் கௌதம் ராமச்சந்திரனுக்கு பாராட்டுக்கள். கதையும் கதைக்கான திரைக்கதையையும் நேர்த்தியாக எடுத்து முடித்திருக்கிறார். விறுவிறுப்பான திரைக்கதை, எந்த இடங்களிலும் தொய்வு இல்லாமலும் கதையை விட்டு விலகி செல்லாமலும் சிறப்பாக வெளிப்படுத்தி படத்தின் விறுவிறுப்பை கூட்டியும் சமூகத்துக்கு தேவையான விஷயத்தை அழகாக சொல்லி முடித்திருக்கிறார்.

முதல் பாதியில் கட்டப்படும் பிரச்சனைகளுக்கான முடிச்சுகளை இரண்டாம் பாதியில் சரியாக அவிழ்த்திருக்கிறார். பிரச்சைகளுக்கு உள்ளாகும் குடும்பங்களின் நிலையில் எதார்த்தமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். நடுத்தர குடும்பத்து பெண்ணாக கார்கி என்ற கதாப்பாத்திரத்தில் சாய் பல்லவி நடித்துள்ளார். எதார்த்தமாகவும் நடிப்பின் மூலம் எளிமையை வெளிப்படுத்தி பார்வையாளர்கள் மத்தியில் பாராட்டுக்களையும் கைத்தட்டல்களையும் சாய் பல்லவி பெறுகிறார். இவரின் நடிப்பின் மூலம் கதைக்கு தேவையான பதைபதைப்பை ஏற்படுத்திவிடுகிறார். தனது தந்தையை காப்பாற்ற போராடும் இடங்களில் கண் கலங்க வைத்திருக்கிறார்.

இவரின் நடிப்பு படத்துடன் முழுமையாக ஒன்றி பார்க்க வைத்திருக்கிறது. வழக்கறிஞராக முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் காளி வெங்கட் நடிப்பின் மூலம் அனைவரையும் கவர்ந்து பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். இவரின் முதிர்சியான நடிப்பின் மூலம் படத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தியுள்ளார். இவரின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் முக்கிய படமாக அமைந்துள்ளது. முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கும் ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன் ஆகியோர் அவர்களில் வேலையை சிறப்பாக செய்துள்ளனர். இவர்களின் எதார்த்த நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக உள்ளது. 

படத்திற்கு தேவையான எதார்த்த காட்சிகளை படமாக்கி பார்வையாளர்களுக்கு விருந்தளித்துள்ளார் ஒளிப்பதிவாளர் பிரேம்கிருஷ்ணா அக்கட்டு. எதார்தமாகவும் நேர்த்தியாகவும் காட்சிகளை கையாண்டு பாராட்டுக்களை பெற்றுள்ளார். கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. சில இடங்களில் காட்சிக்கு தேவைப்படும் இசையை விருந்தாக்கி கண்கலங்க வைத்துள்ளார். ஒளிப்பதிவும் பின்னணி இசையும் கார்கி படத்திற்கு கூடுதல் பலம். மொத்ததில்

‘கார்கி’ வெற்றி பெண்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!