இடியட் – விமர்சனம்

நடிகர் சிவா
நடிகை நிக்கி கல்ராணி
இயக்குனர் ராம் பாலா
இசை விக்ரம் செல்வா
ஓளிப்பதிவு ராஜா பட்டாசார்ஜி

ராஜா காலத்தில் அவர்களை ஏமாற்றி சொத்துக்களை தன்வசம் படுத்திக்கொள்பவர்கள் ஸ்மிதாவின் (நிக்கி கல்ராணி) முன்னோர்கள். கதாநாயகியாக வரும் ஸ்மிதா மனநல மருத்துவராக இருக்கிறார். மறுபுறம் வீரபாண்டியன் என்ற கிராமத்தில் ஊர் தலைவராக இருக்கும் ராசு (ஆனந்தராஜ்) அவருடைய மகன் சின்னராசு (சிவா) மற்றும் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 


ஒரு சிறிய விபத்தில் சின்னராசு மனநலம் பாதிக்கப்பட்டவராக மாறிவிடுகிறார். அச்சமயத்தில் அவருக்கு சிகிச்சை கொடுக்க ஸ்மிதா பணிபுரியும் மனநல மருத்துவமனைக்கு அழைத்து செல்கின்றனர். அப்பொழுது சின்னராசுவிற்கு ஸ்மிதா மீது காதல் ஏற்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் தன் காதலனை உயிர்ப்பிக்க ஸ்மிதாவின் உயிரை எடுப்பதற்காக நீலகண்டி (அக்ஷரா கவுடா) என்ற சூனியக்காரி வலம் வருகிறாள். 


அதேபோன்று 4 அடியாட்களுடன் வில்லன் ரவிமரியா, ஸ்மிதாவை கடத்திச்சென்று பணம் பறிக்க முயற்சி செய்கிறார். இவர்கள் அனைவரும் ஒரு பழைய பங்களாவில் மாட்டிக்கொள்கிறார்கள். அங்கிருந்து எப்படி தப்பித்து செல்கிறார்கள்? நீலகண்டி தன் நோக்கத்தை அடைய ஸ்மிதாவின் உயிரை எடுத்தாளா? காதலியை சின்னராசு கரம் பிடித்தாரா? என்பதே இப்படத்தின் மீதிக்கதை.


வழக்கம் போல் பேய் படங்களுக்கு உரித்தான பழைய பங்களாக்களில் நடக்கும் கதை என்பதால் பெரிதாக ஸ்வாராசியம் இல்லை. தில்லுக்கு துட்டு படங்களில் இடம்பெற்ற காமெடிகளை எதிர்ப்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு சற்று ஏமாற்றமே. இயக்குனர் ராம்பாலா முந்தைய படைப்புகளை போன்ற நகைச்சுவை கொடுக்காதது படத்தின் சரிவு. ஆரம்பத்திலிருந்தே படம் அதன் நிலைப்பாட்டில் இருந்து விலகி எங்கெங்கோ செல்கிறது. கதையிலும் திரைக்கதையிலும் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம் என்பதே மக்களின் கருத்து.





கதாநாயகனாக வரும் சிவா அவருடைய எதார்த்த காமெடி கலந்த இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் படத்தின் காமெடிகள் சாதாரணமாக இருந்ததால் படத்தில் பயணிக்க சிரமமாக இருந்தது. கதாநாயகிகளாக வரும் நிக்கி கல்ராணி, அக்ஷரா கவுடா இருவரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். ஆனந்த்ராஜ், ஊர்வசி, மயில்சாமி, சிங்கமுத்து, ரவிமரியா, ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெற்றுள்ளனர்.


ஒளிப்பதிவாளர் ராஜா பட்டாசர்ஜி தன் பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளார். காட்சியமைப்பின் மூலம் படத்தின் விறுவிறுப்பை ஏற்படுத்த முயற்சி செய்துள்ளார். விக்ரம் செல்வா இசை மற்றும் பிண்ணனி இசை அதிகம் ஈர்க்கவில்லை.


மொத்தத்தில் ‘இடியட்’ ஏமாற்றம்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!