சூர்யா படத்திற்கு எதிர்ப்பு

சூர்யா நடிப்பில் வெளிவரவுள்ள ‘எதற்கும் துணிந்தவன்’ படத்தை தடைவிதிக்க கோரி நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ஜெய்பீம். இந்த திரைப்படம்  பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. இருப்பினும் ஜெய்பீம் திரைப்படம் வன்னியர்களுக்கு எதிராக உள்ளது என்கிற குற்றச்சாட்டும் அப்போது முன்வைக்கப்பட்டது. இது தொடர்பாக பாமக இளைஞரணி தலைவரான ராஜ்யசபா எம்.பி. அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் நடிகர் சூர்யாவுக்கு பல கேள்விகள் எழுப்பி இருந்தார். அந்த அறிக்கையில், குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தும் நோக்கத்துடன் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்து இருந்தார்.


நடிகர் சூர்யாவும் அன்புமணிக்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், அன்புமணி குறிப்பிட்டது போல எந்தவொரு தனிநபரையும் சமுதாயத்தையும் அவமதிக்கும் நோக்கம் படக்குழுவினருக்கும் தனக்கும் இல்லை. சொல்பவர் சுட்டிக்காட்டிய தவற்றை உடனடியாக திருத்தினோம். படைப்புச் சுதந்திரம் யாரையும் இழிவுபடுத்தும் உரிமையை வழங்கவில்லை என்ற அன்புமணியின் கருத்தை ஏற்கிறேன் என கூறியிருந்தார். இருப்பினும் தொடர்ந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் பாமகவினர் சூர்யாவுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நடிகர் சூர்யா நடித்து வரும் 10 ஆம் தேதி வெளிவரவுள்ள  ’எதற்கும் துணிந்தவன்’ படத்தை கடலூரில் வெளியிட தடைவிதிக்க கோரி பாமக சார்பில் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சூர்யா, வன்னியர் மக்களிடம் பொதுமன்னிப்பு கேட்காதவரை படத்தை ஒளிபரப்ப அனுமதிக்கக் கூடாது என பாமக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!