மீரா மிதுனின் யூடியூப் சேனலை முடக்க கோரி மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம்

நடிகை மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவினர் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

தமிழில், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள நடிகை மீரா மிதுன், பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார். சமூக வலைதளங்களில் அடிக்கடி சர்ச்சை கருத்துக்களை வெளியிட்டு வரும் இவர், சமீபத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், சினிமாவில் பணியாற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த இயக்குனர்கள் பற்றியும் இழிவான கருத்துகளை தெரிவித்து யூடியூபில் வீடியோ பதிவிட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மீரா மிதுனை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார், அவரை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், நடிகை மீரா மிதுன் யூடியூப் சேனலை முடக்க கோரி யூடியூப் நிறுவனத்திற்கு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடிதம் எழுதி உள்ளனர். நடிகை மீரா மிதுன், வன்முறையை தூண்டும் வகையில் பேசி வீடியோ வெளியிட்டதால் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!