ஜோர்டான் பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிக்கும் பிருத்விராஜ்

படப்பிடிப்புக்காக ஜோர்டான் சென்ற பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ், பாலைவனத்தில் நல்ல சாப்பாடு கிடைக்காமல் தவிப்பதாக கூறியுள்ளார்.

தமிழில் மொழி, கனா கண்டேன், சத்தம் போடாதே, வெள்ளித்திரை, நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள மலையாள நடிகரான பிருத்விராஜ், ஆடு ஜீவிதம் படப்பிடிப்புக்காக 57 பேருடன் கொரோனா பரவலுக்கு முன்பே ஜோர்டான் சென்று தற்போது நாடு திரும்ப முடியாமல் தவிக்கிறார்.

அங்குள்ள பாலைவனத்தில் முக்கிய காட்சிகளை படமாக்கிக்கொண்டிருந்தபோது விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது. இதனால் படக்குழுவினர் பாலைவன கூடாரங்களிலேயே முடங்கினர். பிருத்விராஜ் உள்ளிட்ட 58 பேரையும் தற்போதைய சூழ்நிலையில் மீட்டு வர வாய்ப்பு இல்லை என்று கேரள அரசும் கைவிரித்து விட்டது.

இந்த நிலையில் ஜோர்டானில் தவித்து வரும் பிருத்விராஜ் டுவிட்டர் பக்கத்தில், “கடந்த வருடம் புத்தாண்டு தினத்தில் மனைவி மற்றும் சொந்தங்களுடன் ருசியான மதிய உணவை சாப்பிட்டேன். ஆனால் இந்த ஆண்டு நல்ல உணவை சாப்பிடும் வாய்ப்பு இல்லாமல், பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் உறவுகளை பிரிந்து வாடுகிறேன். விரைவில் ஒன்று சேரும் காலம் வரும்” என்று பதிவிட்டுள்ளார். அதோடு மனைவியுடன் சேர்ந்து உணவு சாப்பிட்ட புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!