எம்.ஜி.ஆர்., சிவாஜி செய்ததை இப்போ உள்ள பெரிய நடிகர்கள் செய்யணும்: தியேட்டர் உரிமையாளர்கள்

பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸான 100 நாட்கள் கழித்தே டிஜிட்டல் தளத்தில் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்ட தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டம் கோவையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மூன்று பரிந்துரைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. அவை வரும் ஜனவரி மாதம் நடக்கும் அனைத்து தியேட்டர் உரிமையாளர்கள் கூட்டத்தில் முன் வைக்கப்படும்.

து குறித்து தமிழ்நாடு தியேட்டர் உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் கூறியதாவது,

தற்போது ப்ரொடக்ஷன் பணத்தில் பெரும்பகுதி சம்பளத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால் படம் பாக்ஸ் ஆபீஸில் ஓடாவிட்டால் தயாரிப்பாளர்கள் சிரமப்படுகிறார்கள். படம் ஓடாவிட்டால் பெரிய ஸ்டார்கள் உதவி செய்தால் தயாரிப்பாளர்கள் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு நன்றாக இருக்கும்.

நான் நடிகர்களை பணம் வாங்காமல் சும்மா வேலை செய்யச் சொல்லவில்லை. நியாயமான தொகையை வாங்கச் சொல்கிறேன். ஒரு நடிகரின் முந்தைய படம் சரியாக போகவில்லை என்றால் அதே தயாரிப்பாளரின் படத்திற்கு அவர் மீண்டும் கால்ஷீட் கொடுக்கலாம். இது ஒன்றும் புதிது அல்ல. எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோர் செய்திருக்கிறார்கள்.

முன்பு ரஜினிகாந்த் கூட செய்திருக்கிறார். அவரின் ஸ்ரீ ராகவேந்திரா படம் ஓடாதபோது அவர் வேலைக்காரன் படத்தில் இலவசமாக நடித்தார். பெரிய நடிகர்களின் படங்களை ரிலீஸான சில வாரங்களில் அதை டிஜிட்டல் பிளாட்ஃபார்மான நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைமில் வெளியிடக் கூடாது.

தியட்டர்களில் இருந்து வரும் லாபம் மிகவும் குறைவாக உள்ளது. சிறு தியேட்டர் உரிமையாளர்களின் நிலையை பற்றி யோசித்துப் பாருங்கள். பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸாகி 100 நாட்கள் கழித்தே நெட்ஃபிளிக்ஸ், அமேசான் ஆகியவற்றில் வெளியிட வேண்டும். பெரிய ஸ்டார்களுக்கு மட்டுமே சொல்கிறோம். இந்தி திரையுலகில் இப்படித் தான் செய்கிறார்கள்.

தமிழக அரசின் 8 சதவீத மாநில வரியை திரும்பப் பெற வேண்டும். இந்த வரி வேறு எந்த மாநிலத்திலும் இல்லை என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!