திரவுபதி கதையை படமாக்கும் தீபிகா படுகோனே

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே, திரவுபதி கதையை படமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

ஆசிட் தாக்குதலால் பாதிக்கப்பட்டு மீண்டெழுந்து வந்து சாதித்த லக்ஷ்மி அகர்வால் என்பவரின் உண்மைக் கதை ‘சப்பாக்’ என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் லக்ஷ்மி கதாபாத்திரத்தில் நடித்ததோடு முதல் முறையாக தயாரிப்பாளராகவும் தீபிகா படுகோன் மாறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து மகாபாரதக் கதையைப் புதுவிதமாகச் சொல்லும் நோக்கில், பாண்டவர்களின் மனைவியான திரவுபதி கதாபாத்திரத்தின் பார்வையில் ஒரு திரைப்படத்தை தீபிகா தயாரிக்கவுள்ளார். 2021 தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டுள்ளது. தொடர்ந்து இன்னும் சில பாகங்கள் எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் குறித்துப் பேசிய தீபிகா, “திரவுபதி கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்குக் கிடைத்த கவுரவம். மிகுந்த ஆர்வத்துடன் எதிர்நோக்கியுள்ளேன். என் வாழ்க்கையில் மிகப்பெரிய கதாபாத்திரம் இது என்று உண்மையாக நம்புகிறேன். மகாபாரதம் இதிகாசக் கதையாகவும், கலாச்சாரத்தில் அது ஏற்படுத்தும் தாக்கத்துக்காகவும் அறியப்பட்டாலும், நிறைய வாழ்க்கைப் பாடங்களை மகாபாரதத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம். புதிய ஒரு பார்வையில் சொல்லும்போது அது சுவாரஸ்யமாக இருப்பதோடு மிகவும் விசே‌ஷமானதாகவும் அமையும்“ என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!