தண்ணீருக்குள் குழந்தை பெற்ற அஜித் பட நடிகை

அஜித்துடன் பில்லா 2 படத்தில் நடித்த , தண்ணீருக்குள் குழந்தை பெற்ற அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இந்தியில் பல்வேறு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், படங்களிலும் நடித்தவர் புரூனா அப்துல்லா. தமிழில் அஜித் நடித்த ‘பில்லா 2’ படம் மூலம் அறிமுகமானார். பிரேசில் நாட்டை சேர்ந்தவரான புரூனா இந்தியாவுக்கு சுற்றுலா பயணியாக வந்து நடிகையானவர். ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்தவரான ஆலன் ப்ரேஸ் என்பவருடன் புரூனா அப்துல்லாவுக்கு காதல் மலர்ந்தது. கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் புரூனாவுக்கு கடந்த 31-ந்தேதி இரவு பெண் குழந்தை பிறந்துள்ளது. அதற்கு இசபெல்லா என்று பெயரிட்டுள்ளனர். தண்ணீரில் பிரசவமாகும் முறை மூலமாக குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதன் அனுபவங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:- நான் கர்ப்பமாவதற்கு முன்பே நீரில் தான் பிரசவம் நடக்கப்போகிறது என எனக்கு தெரியும். எந்த மருந்தும் இல்லாமல், எவ்வளவு மென்மையாக இருக்க முடியுமோ அவ்வளவு மென்மையாக என் குழந்தை பிறக்க வேண்டும் என்று நினைத்தேன். மருத்துவமனையில் கொடுக்கப்போகும் மருந்துகளினால் ஏற்படும் பின் விளைவுகளை எதிர்கொள்வது எனக்கு பிடிக்கவில்லை.

அந்த தருணத்தில் நான் ஆர்வத்துடன் இருக்க, நன்றாக உணர எனக்கு உதவியவர்கள் மட்டும் சூழ, என் குழந்தை வருவதற்காக நான் காத்திருக்கும் அமைதியான மென்மையான ஒரு சூழலை கற்பனை செய்து வைத்திருந்தேன். இது எல்லாம் எனக்குக் கிடைத்தது என் அதிர்ஷ்டமே. வெதுவெதுப்பான தண்ணீர் நிறைந்த தொட்டியில் என் குழந்தையை நான் பெற்றெடுத்தேன்.

என் கணவர், என் அம்மா, என் மருத்துவர், என் உதவியாளர் ஆகியோர் என்னுடன் இருந்தனர். அந்த நாளுக்காக என்னை நான் தயார் செய்துகொண்டேன். தினமும் உடற்பயிற்சி செய்தேன். சரியான உணவை உண்டேன். தியானம் செய்தேன். ஒவ்வொரு சின்ன வி‌ஷயத்தையும் என் மனக்கண்ணில் ஓட்டிப் பார்த்தேன்.

ஒரு சனிக்கிழமை அன்று என் குழந்தையை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். 4 மணி நேரங்களுக்கு மேல் குழந்தை பேறுக்கான காலம் நீளக்கூடாது என்று நினைத்தேன். நீர் தொட்டியில் குழந்தையை பிரசவிக்க வேண்டும் என்று நினைத்தேன். மருந்துகள் இல்லாமல் நடக்க வேண்டும் என்று நினைத்தேன். நினைத்தது எல்லாம் கிடைத்தது. வலி இல்லாமலும் இருக்க வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் உண்மையில் அது நடக்கவில்லை.

இதை சொன்னாலும், நான் ஒரு சூப்பர் ஹீரோ போல உணர்கிறேன். வெல்ல முடியாதது போல. என்னால் எதுவும் செய்ய முடியும் என்று உணர்கிறேன். என் குழந்தை பிறக்கும் போது, என் முழு சுயகட்டுப்பாட்டில், விழிப்புடன் நான் இருக்க வேண்டும் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. இயற்கை அதன் வேலையை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். மாயம் போல உள்ளது. நான் வலிமையாக இருப்பதாக நினைத்து கொண்டேன்.

தசை சுருக்கங்கள் எல்லாவற்றையும் அதிதீவிரமாக உணர்ந்தேன். எல்லாம் முடிந்த பின், அன்பும், தூய்மையான சந்தோ‌ஷத்தையும் மட்டுமே என்னால் உணர முடிந்தது. வலி பறந்து போனது. நிமிடங்களில் நான் மீண்டு விட்டேன். முதல் நிமிடத்தில் இருந்தே என் குழந்தையின் வருகையை என்னால் கொண்டாட முடிந்தது. அவள் விழித்துக்கொண்டும், விழிப்போடும் இருந்தாள். அமைதியாக, அழகாக. அவள் தான் எனக்கு எல்லாம். ஒருவருக்குக் கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த அன்பளிப்பை எனக்கு அளித்ததற்கு நன்றி.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!