சாவி வேண்டாம்.. பூட்டை உடைப்பேன்.. அடிதடியில் களம் இறங்கிய விஷால்..!!


தயாரிப்பாளர் சங்க தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, முந்தைய நிர்வாகம் வைத்திருந்த ரூ. 7 கோடி வைப்பு நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை, விஷால் தன்னிச்சையாக செயல்படுகிறார் என்று கூறி சென்னை தி. நகர் மற்றும் அண்ணா சாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க கட்டிடங்களுக்கு சில தயாரிப்பாளர்கள் நேற்று பூட்டு போட்டனர்.

இந்நிலையில் விஷால் இன்று தி. நகர் அலுலவலகத்திற்கு வந்தார்.


தி. நகர் அலுவலக வாசலில் தேனாம்பேட்டை உதவி ஆணையர் கோவிந்தராஜுவுடன் விஷால் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சாவியை வைத்து பூட்டை திறக்கலாம் என்று போலீசார் கூறியதற்கு விஷால் அதை ஏற்க மறுத்து பூட்டை உடைத்தே தீருவேன் என்று மல்லுக் கட்டினார். போலீசாருடன் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பூட்டை உடைப்பது சரி அல்ல. அவ்வாறு செய்தால் கைது செய்யப்படும் என்று போலீசார் கூறியதை விஷால் கேட்கவில்லை. பூட்டை உடைக்கும் நோக்கத்தில் அலுவலகத்திற்குள் செல்ல முயன்றார். ஆனால் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி கைது செய்து வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.


திருட்டு பூட்டுக்கு எதற்காக போலீசார் பாதுகாப்பு அளிக்கிறார்கள் என்று கைது செய்யப்பட்ட பிறகு விஷால் கேள்வி எழுப்பினார். பூட்டு விவகாரம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் கதிரேசன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் விஷால் பூட்டை உடைக்க முயன்றார்.

ரூ. 7 கோடி வைப்பு நிதிக்கு கணக்கு கேட்கிறார்கள் சில தயாரிப்பாளர்கள். மேலும் படங்களை வெளியிடுவதை ஒழுங்குப்படுத்த துவங்கிய கமிட்டியும் முறைப்படி செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விஷால் தயாரிப்பாளர் சங்க பக்கம் வந்தே 7 மாதங்கள் ஆகிவிட்டது என்று நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட தயாரிப்பாளர்கள் தெரிவித்த நிலையில் இன்று அவர் வந்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!