பேய் இருக்கா இல்லையா – சினிமா விமர்சனம்


ஊரில் அமர் மற்றும் அவரது நண்பர்கள் மூன்று பேர் ஜாலியாக ஊரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் நான்கு பேருக்கும் ஆதரவாக யாரும் இல்லை. அதே ஊரில் இருக்கும் பொன்னம்பலம் ரவுடிசம் செய்துக் கொண்டு இருக்கிறார்.

ஒரு நாள் நாயகி ஜோதிஷாவை பொன்னம்பலத்தின் தம்பி துரத்தி வருகிறார். இதைப் பார்க்கும் அமர் மற்றும் நண்பர்கள், பொன்னம்பலத்தின் தம்பியை அடித்து ஜோதிஷாவை காப்பாற்றுகிறார்கள். இதனால், கோபமடையும் பொன்னம்பலம், அமர் மற்றும் நண்பர்களை கொல்ல நினைக்கிறார்.

பெரிய தாதாவுடன் பகைத்துக் கொண்டதால், தலைமறைவாக இருக்க, ஊருக்கு ஒதுக்கு புறமாக இருக்கும் ஒரு பங்களாவில் தஞ்சம் அடைகிறார்கள். அதே பங்களாவில் ஜோதிஷாவும், அவரது தோழிகளும் பேய் இருக்கிறதா என்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய வருகிறார்கள். மேலும் நாடக கும்பல் ஒன்றும் அந்த பங்களாவிற்கு வருகிறார்கள்.


பேய் இருப்பதாக சொல்லப்படும் அந்த பங்களாவில் அமர் மற்றும் நண்பர்கள், ஜோதிஷா மற்றும் தோழிகள், நாடக கும்பல் ஆகியோர் எப்படி வெளியில் வந்தார்கள்? அந்த பங்களாவில் பேய் இருக்கிறதா? தன் தம்பியை அடித்தவர்களை பொன்னம்பலம் பழிவாங்கினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் அமர் ஓரளவிற்கு நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அவருக்கு நண்பராக வருபவர்கள் நடிப்பில் கவனம் செலுத்தி இருக்கலாம். நாயகியாக வரும் ஜோதிஷா கவர்ச்சியால் ரசிகர்களை கவர முயற்சித்திருக்கிறார். ஆனால், ஓரளவிற்கு கைகொடுத்திருக்கிறது என்றே சொல்லலாம். வில்லனாக நடித்திருக்கும் பொன்னம்பலத்தை நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் பார்ப்பது மகிழ்ச்சி.

பேய் படங்கள் என்றாலே, பங்களா, பழிவாங்குவது என வழக்கமான அதே பாணியை கையில் எடுத்து படம் இயக்கி இருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்குமார். திரைக்கதையை மாற்றி அமைத்திருக்கலாம். திரையில் காமெடி காட்சிகள் எதுவும் எடுபடவில்லை. கதாபாத்திரங்களிடையே நடிப்பை வரவழைக்க, இயக்குனர் சிரமப்படவில்லை என்றே தோன்றுகிறது. நீண்ட காட்சிகள், தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம்.

சம்பத் இசையில் பாடல்கள் சுமார் ரகம். மகிபாலனின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘பேய் இருக்கா இல்லையா’ சுமார் ரகம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!