தியா – சினிமா விமர்சனம்


இளம் வயதிலேயே நாயகி சாய் பல்லவியும், நாயகன் நாக சவுரியாவும் காதலித்து வருகின்றனர். இவர்களது காதல் அடுத்த கட்டத்திற்கு செல்ல சாய் பல்லவி கற்பமாகிறார். இந்த விஷயம் இரு வீட்டாருக்கும் தெரிய வர, சாய் பல்லவியின் படிப்பை காரணம்காட்டி கருகலைப்பு செய்கின்றனர். பின்னர் சாய் பல்லவியின் படிப்பு முடியும் வரை இருவரும் சந்திக்க முடியாதபடி கட்டுப்பாடுகளையும் விதிக்கின்றனர்.

கருக்கலைப்பு, காதல் பிரிவு என வருத்தத்தில் இருக்கும் சாய் பல்லவி, தற்போது தனது குழந்தை உயிரோடு இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனையில் எண்ண ஆரம்பிக்கிறார். படிப்பு முடிந்து நாக சவுரியாவுக்கும், சாய் பல்லவிக்கும் திருமணம் செய்து வைக்கின்றனர். தனியாக ஒரு வீட்டில் குடியேறும் இவர்களுடன், ஒரு குழந்தையும் பயணிக்கிறது. ஆனால் அந்த குழந்தை யார் கண்ணிற்கும் தெரிவதில்லை.


இந்த நிலையில், சாய் பல்லவியின் அம்மா ரேகா, மாமா ஜெயக்குமார் மற்றும் நாக சவுரியாவின் அப்பா நிழல்கள் ரவி கொலை செய்யப்படுகின்றனர். இந்த கொலை குறித்து விசாரிக்கும் போலீஸ் அதிகாரியாக ஆர்.ஜே.பாலாஜி வருகிறார். அதேபோல் டாக்டர் ஒருவரும் கொலை செய்யப்படுகிறார்.

இப்படி இருக்க அடுத்தது நாக சவுரியா கொல்லப்படுவாரோ என்று பயப்படும் சாய் பல்லவி அவரை காப்பாற்ற முயற்சி செய்கிறார்.

கடைசியில் அவர்கள் கொல்லப்பட்டது எப்படி? நாக சவுரியாவை சாய் பல்லவி காப்பாற்றினாரா? அந்த குழந்தை யார்? அந்த குழந்தைக்கும் சாய் பல்லவிக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.

தமிழில் தனது முதல் படத்திலேயே வித்தியசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் சாய் பல்லவி. குழந்தைக்கு அம்மா, குடும்பப் பெண், காதல் என பல்வேறு காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக அம்மாவாக அவரது கதாபாத்திரம் சிறப்பாக வந்திருக்கிறது. நாக சவுரியாவின் நடிப்பு வித்தியாசமாக ரசிக்கும்படி இருப்பது குறிப்பிடத்தக்கது.


குழந்தையாக நடித்திருக்கும் பேபி வெரோனிகா அரோரா ஆர்ப்பாட்டம் இல்லாமல் குழந்தைத் தனமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். ஆர்.ஜே.பாலஜி போலீஸ் அதிகாரியாக வந்து செல்கிறார். ரேகா, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், சந்தான பாரதி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்களும் அவர்களுக்கு கொடுத்த வேலையை பூர்த்தி செய்திருக்கின்றனர்.

கருக்கலைப்பு செய்வது என்பது குற்றம் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. சிலர் சட்டங்களை மீறி கருக்கலைப்பு செய்வதும் உண்டு. அது ஒருவிதத்தில் சரி என்றாலும், அதனால் ஒரு உயிர் போவது என்பதை ஏற்றுக் கொள்ளமுடியாது. கலைக்கப்படும் கருவானது பழிவாங்கினால் என்னவாகும் என்பதை உணர்த்தும் விதமாக விழிப்புணர்பு படமாக இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார் விஜய். திரைக்கதையில் த்ரில்லரை முயற்சி செய்து பேய் படத்தில் இருப்பது போன்று விறுவிறுப்பை கூட்டியிருக்கிறார்.

சாம்.சி.எஸ்ஸின் பின்னணி இசை படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. நிரவ் ஷாவின் ஒளிப்பதிவில் காட்சிகள் ரசிக்கும்படியாக வந்துள்ளது.

மொத்தத்தில் `தியா’ பேயில்லை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி