எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரோ தீர்வு அமைதி காப்பதுதான்: விவேக் பேச்சு


ஆழ்வார்குறிச்சியில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்.

நெல்லை மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பரமகல்யாணி மேல்நிலைப்பள்ளியில் கலாம் பசுமை இயக்கம், ஐ சப்போர்ட் பவுண்டேசன் சார்பில் 10 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு நடிகர் விவேக் தலைமை தாங்கி பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டார். பரமகல்யாணி கல்வி குழுமத்தின் தனி அலுவலர் சுந்தரம் வரவேற்றார்.


சேரன்மாதேவி உதவி கலெக்டர் ஆகாஷ், அம்பை தாசில்தார் வெங்கட்ராமன் உள்ளிட்டோர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் மரம் வளர்ப்பதை வலியுறுத்தி ஊர்வலம் நடைபெற்றது. இதில் சுமார் 2 ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

விழாவில் நடிகர் விவேக் பேசியதாவது:-

1960-ல் இந்த ஆழ்வார்குறிச்சி கல்வி குழுங்களின் பள்ளி தொடங்கப்பட்டு 56 வருடங்கள் ஆகின்றன. கிராமப்புறங்களில் இதுபோன்று இலவச கல்வி கொடுத்து வருவது மிகப்பெரிய விஷயம்.


நான் சினிமா உலகத்திற்கு வந்து 39 ஆண்டுகள் ஆகின்றன. இதில் பத்மஸ்ரீ விருதும் வாங்கியுள்ளேன். இந்த பள்ளியில் இதுவரை எந்த ஒரு நடிகரையும் அழைத்ததில்லை என்றார்கள். நான் ஒரு நடிகராக மட்டுமல்லாமல், சமூக சேவையிலும் ஈடுபட்டு வருவதால் தான் மக்களின் அபிமானத்தை பெற்றுள்ளேன்.

இவ்வாறு அவர் பேசினார்.


பின்னர் விவேக் நிருபர்களிடம் கூறுகையில், அய்யா அப்துல்கலாம் எனக்கு கொடுத்த கடமையை நான் செய்து வருகிறேன். 1 கோடி மரக்கன்றுகள் நட வேண்டும் என அவர் கூறினார். தற்போது 29 லட்சத்து 3 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. திரைப்படங்களுக்கு தடைகள் வருவதும், அதை மீறுவதும் சில, பல காலங்களாக நடந்து வருவது தான். ‘மெர்சல்’ பட விவகாரத்தை விஜய் மிக கவனமாக கையாண்டார். அதே போல அஜித் பற்றி சில விஷயங்கள் வெளி வந்தபோதும் அவர் பக்குவமாக அமைதி காத்து கையாண்டார். அமைதி காப்பதன் மூலம் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியும் என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!